குழப்ப வேண்டாம் – எதிரணிகளிடம் அமைச்சர் கோரிக்கை

அரசியல் செய்யும் உரிமை எதிர்க்கட்சிக்கு உள்ளது. எனினும் நாட்டிற்காக மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களை பின்னடைவு செய்யும் செயல்களில் எதிர்க்கட்சி ஈடுபடக்கூடாது என அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆற்றிய கொள்கை விளக்க உரை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்:

ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரையில் அவர் நாட்டுக்கு மிகச்சிறந்த செய்தியை தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வருட காலம் நாடு முடக்கப்பட்டிருந்ததை நாம் அனைவரும் அறிவோம். அதனால் கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றவோ அபிவிருத்தியை முன்னெடுப்பதோ முடியாத காரியமாக இருந்தது.

எனினும் தற்போது நிலவும் சூழ்நிலையில் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட வேலைத்திட்டங்களுக்கமைய எதிர்வரும் மூன்று வருட காலங்கள் நாட்டின் அபிவிருத்திக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் சிறந்த வழிவகுக்கும். எனினும் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது என்பதை நாம் குறிப்பிட வேண்டும்.

எதிர்க்கட்சிக்கு அரசியல் செய்யும் உரிமை உள்ளது எனினும் நாட்டின் அபிவிருத்திக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ நாட்டின் முன்னேற்றத்தை பின்னடைவு செய்வதற்கோ செயற்படக் கூடாது என நாம் கேட்டுக்கொள்கின்றோம். அது தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு மிகவும் சிறந்தது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

Related Articles

Latest Articles