நடைமுறை சாத்தியமான தீர்வுகளைப் பெறுவதற்காக ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணையுமாறு வடக்கு, கிழக்கு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய மகா கூட்டணி உதயமாகியுள்ளது. இலங்கை அடையாளம் கொண்ட தேசிய கூட்டணி இது, அனைத்து இன மக்களும் இலங்கையர்களாக ஒன்றுகூடக்கூடிய மேடையென்பதாலேயே தமிழ் முற்போக்கு கூட்டணியும் இணைந்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு வடக்கு, கிழக்கில் வாழக்கூடிய ஈழத் தமிழ் சகோதரர்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய என் சகோதரக் கட்சி தலைவர்களுக்கு ஒரு அழைப்பு விடுக்க விரும்புகின்றேன்.
நடைமுறை சாத்தியமான தீர்வுகளைப் பெற்று, அங்கிருந்து முன்னோக்கிச் செல்வதற்காக இந்த மகா தேசிய கூட்டணியில் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன். பொருளாதாரத்தை மீட்பதற்குரிய சிறந்த அணியும் இந்த கூட்டணியில்தான் உள்ளது.” – என்றார்.










