” மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அரசுக்கு எவ்வாறு அழுத்தம் கொடுப்பது என்பது பற்றி ஆராய்வதற்காக தமிழ்த் தரப்புக்களால் ஏற்பாடு செய்யப்படும் சந்திப்புக்களில் பங்கேற்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
எனினும், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்துக் கலந்துரையாடும் நோக்கிலான சந்திப்பு எனில் அதில் பங்கேற்பது குறித்து கட்சியே தீர்மானிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நீண்டகாலம் நடத்தப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், அதற்குரிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கிலும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் பங்கேற்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அந்தக் கட்சியின் சார்பில் எவரும் பங்கேற்றிருக்கவில்லை. அதனையடுத்து தனிப்பட்ட சில காரணங்களால் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எனவும், இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் நடத்தப்படும் சந்திப்புக்களில் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொள்வர் என எதிர்பார்ப்பதாகவும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் அந்தக் கூட்டத்தில் பங்கேற்காமைக்கான காரணம் குறித்து சுமந்திரனிடம் வினவியபோது, அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்குத் தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டது எனவும், இருப்பினும் அன்றைய தினம் கொழும்பில் இருக்க வேண்டியிருந்த காரணத்தால் அதில் பங்கேற்க முடியவில்லை எனவும் பதிலளித்தார்.