சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 07 பேரும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் இந்த வழக்கு இன்று(08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மருந்து கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, மருத்துவ விநியோகப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர், வைத்தியர் கபில விக்ரமநாயக்க, மருந்து நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட 07 பேர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 10 ஆவது சந்தேகநபராக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க மற்றும் 11ஆவது சந்தேகநபரான மதிப்பீட்டு குழு உறுப்பினர், வைத்தியர் துசித சுதர்சன ஆகியோர் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அன்றைய தினம் அவர்களது பிணை மனு மீதான உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முதலாவது சந்தேகநபரான மருந்து விநியோக நிறுவனத்தின் உரிமையாளர் சுதத் ஜனக்க பெர்னாண்டோ, சாட்சி கூண்டிலிருந்தவாறு வாக்குமூலம் வழங்குவதற்கு சந்தர்ப்பம் கோரியிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொதுச்சொத்து சட்டத்தின் கீழ், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு உள்ள விசாரணை செய்யும் அதிகாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதனை செவிமடுத்த நீதவான், நீதிமன்றில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணிகள் உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கு இல்லாத பிரச்சினையை பிரதிவாதியினால் எழுப்ப முடியாது என சுட்டிக்காட்டினார்.
வாக்குமூலம் அளிக்கும் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபரால் கூறப்பட்ட விடயங்கள் வலுவானதல்ல எனவும் நீதவான் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் பொறுப்பான வாக்குமூலமொன்றை வழங்கவேண்டிய தேவை இருப்பின், தம்மிடம் இரகசிய வாக்குமூலத்தை வழங்க முடியும் என நீதவான் இதன் போது தெரிவித்துள்ளார்.