சப்ரகமுவ மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் அத்தியட்சகர் கபில கன்னங்கர நேற்று தெரிவித்தார்.
இவ்விடயமாக அவர் தொடர்ந்து தகவல் தருகையில்,
இரத்தினபுரி மாவட்டத்தில் 397 பேரும் கேகாலை மாவட்டத்தில் 367 பேருமாக கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இவற்றில் திவுரும்பிட்டிய ஆடைத் தொழிற்சாலை மற்றும் சீதாவக தொழிற்பேட்டை ஆகியவற்றில் இருந்து உருவான அல்லது தொடர்புடையவர்களின் ஊடாகவே அதிகமான கொரோனா தொற்றாளர்கள் உருவாகியுள்ளனர்.அத்துடன் கடந்த ஐந்து தினங்களில் இரத்தினபுரி மாவட்டத்தில் 126 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 98 பேர் எஹலியகொடை பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 397 தொற்றாளர்களில் 173 பேர் திவுரும்பிடிய ஆடை த்தொழிற்சாலையில் பணிபுரியும் மற்றும் இவர்களுடன் தொடர்புடையவர்களாவர்.மேலும் கேகாலை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 367 பேரில் 70 பேர் சீதாவக்க தொழிற்பேட்டையில் பணிபுரிபவர்கள் அல்லது தொடர்புடையவர்கள் ஆவர்.
இந்த ஏற்றுமதி தொழில் வலயங்கள் சப்ரகமுவ மேல் மாகாண எல்லையில் அமைந்திருந்தாலும் இவற்றில் பணிபுரிவோரில் கணிசமான தொகையினர் இரத்திபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.










