கைதி ஒருவருக்கு போதைப்பொருளை வழங்குவதற்கு பெண் ஒருவருக்கு உடந்தையாக இருந்தார் எனக் கூறப்படும் சிறைச்சாலை அதிகாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை சிறைச்சாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வஸ்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய சிறைச்சாலை அதிகாரியே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு ஐஸ், ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களும் கையடக்கத் தொலைபேசியையும் கொடுக்க முயன்ற பெண் ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் அண்மையில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
கைதுசெய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அதே சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைதிக்கு போதைப்பொருட்களை கொடுக்க உடந்தையாக இருந்ததாகவும் அவருக்கு 35 ஆயிரம் ரூபா பணம் வழங்கியதாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேக நபரான சிறைச்சாலை அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.