” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து விலகியவர்களில் முற்போக்கான தலைவர்கள் மீண்டும் எம்முடன் இணைந்து பயணிப்பதற்கான கதவு திறந்தே உள்ளது.” – என்று அக்கட்சியின் செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில் கூறியவை வருமாறு.
“ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த ஷான் விஜயலால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் அல்லர். சுதந்திரக்கட்சி உறுப்பினரான அவர் தேர்தலில் கூட்டணியாக எம்முடன் போட்டியிட்டார். அவர் எதிரணிக்கு சென்றது எமக்கு தாக்கம் அல்ல.
எது எப்படி இருந்தாலும் எமது கட்சிக்கு எதிராக கடந்த காலங்களில் ஹொலிகொப்டர் கூட்டணி என பல கூட்டணிகள் அமைக்கப்பட்டன. அவை தற்போது உடைந்துவருகின்றன. எனவே, வெளியேறியவர்களில் முற்போக்கு தலைவர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம். இணைந்து பயணிப்பதற்கான சந்தர்ப்பம் அவ்வாறே உள்ளது.
வற் வரி அதிகரிப்பு தொடர்பில் எமக்கும் பிரச்சினை உள்ளது. கட்சி என்ற அடிப்படையில் அதனுடன் நாம் இணங்கவில்லை. எனினும், போலி போராட்டங்கள், பிரச்சாரங்கள்மூலம் அந்நிய செலாவணி தடுக்கப்பட்டது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவதை தடுக்கப்பட்டது. இதனை செய்தவர்கள்தான் இன்று வற் வரி அதிகரிப்புக்கு எதிராக கதைக்கின்றனர். ” – என்றார்.










