கொட்டகலை பிரதேச சபை உபதலைவரால் சிரேஷ்ட ஊடகவியலாளருக்கு மரண அச்சுறுத்தல்!

கொட்டகலை பிரதேச சபையின் உபதலைவர் மற்றும் அவரது குடும்பத்தாரால் தனக்கு மரண அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவலிங்கம் சிவகுமாரன் பத்தனை டிம்புள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.

கொட்டகலையில் அமைந்துள்ள தனது பெரிய தாயாரின் காணியில் மேற்படி பிரதேச சபையின் உபதலைவரின் உறவினரால் அமைக்கப்பட்ட சட்டவிரோத கூடாரத்தை அகற்றும்படி இவர் கூறியதற்கு பிரதேச சபை உபதலைவர் சவால் விடுத்துள்ளார்.

பின்பு ஊடகவியலாளர் சிவகுமாரன் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்படி உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் மத்திய மாகாண ஆளுநர் ,மாகாண பிரதான செயலாளர் ஆகியோருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அது உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்ட சட்டவிரோத கூடாரம் என்பது உறுதியாகவே நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி துணை ஆணையாளர் அலுவலகத்தினால் சட்ட விதிகளுக்கு அமைய இதை அகற்றும்படி கொட்டகலை பிரதேச சபைக்கு அறிவுறுத்தல் விடப்பட்டிருந்தது.

அதன்படி இந்த கூடாரத்தை டிசம்பர் மாதம் 20 ஆம் திகதிக்குள் அகற்றும்படி கொட்டகலை பிரதேச சபையால் கடிதம் மூலம் பிரதேச சபையின் உறவினருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அவ்வாறு தற்காலிக கூடாரம் அகற்றப்படவில்லை.

இந்நிலையில் நேற்று 24 ஆம் திகதி அவ்விடம் வந்த பிரதேச சபை உபதலைவர் உட்பட அவரது உறவினர்கள் பத்து பேர், ஊடகவியலாளருக்கு நேரடியாக அச்சுறுத்தல் விடுத்ததோடு இனி செய்திகள் எழுதுவதை பார்ப்போம் என மிரட்டியுள்ளனர்.

உபதலைவரின் உறவினர் ஊடகவியலாளர் சிவகுமாரனை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு ஊடகத்தொழிலை கொச்சைப்படுத்தி கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இது தொடர்பில் ஊடகவியலாளர் பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளதோடு தான் அங்கம் வகிக்கும் ஊடக அமைப்புகளுக்கும் அறிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles