கொத்மலை பிரதேச செயலாளருக்கு கொரோனா தொற்று காரணமாக நுவரெலியா பிரதேச செயலாளரும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கொத்மலை பிரதேச செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அவருடைய கணவரான நுவரெலியா பிரதேச செயலாளர் உட்பட அவருடைய குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நுவரெலியா மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் டி.எம்.எஸ்.பி.தெல்பிட்டிய இன்று (24.12.2020) தெரிவித்துள்ளார்.
கொத்மலை பிரதேச சபையின் செயலாளருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் தற்பொழுது ஹங்குரன்கெத்த கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அதே நேரம் அவருடைய கணவரான நுவரெலியா பிரதேச செயலாளரும் அவருடைய குடும்பத்தை சார்ந்த 5 பேரும் அவர்களுடைய வீட்டிலும் அங்கு வேலை கடமையில் இருந்த 22 பேரும் அவர்களுடைய வீடுகளிலும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கொத்மலை பிரதேச செயலாளர் கண்டியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த நிலையிலேயே இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.ஏனெனில் இந்த கூட்டத்தில் தற்பொழுது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அக்கரபத்தனை பிரதேச சபையின் தலைவரும் மேற்படி கண்டியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
அதே நேரம் அக்கரபத்தனை பிரதேச சபையின் தலைவருடன் தொடர்பில் இருந்த அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல பிரதேச சபையின் தலைவர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
- நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு
