தோல் இசைச்கருவியான பறை தமிழரது மங்கல, அமங்கல வைபவங்களில் முக்கிய பங்கை வகித்து வந்துள்ளது. பண்டைய காலத்திலும் இது முக்கிய இசைக்கருவியாக விளங்கியது. இது அக்காலத்தில் தகவல் தொடர்பு சாதனமாகவும் இருந்து வந்துள்ளது.
இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்களுக்கு தகவல்களை வழங்க பறை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. காலை வேளையில் ‘பெரட்டு தப்பு’ அடித்து தொழிலாளர்களை பெரட்டு களத்திற்கு அழைப்பர். சம்பளம் வழங்கும் போது ‘சம்பள பறை’ முழங்கும்.
மரணவீடு, நோய்ப் பரவல் எனப் பல்வேறு தகவல் தொடர்புகளுக்கு இந்த இசைக் கருவியான பறை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
அது போன்று தமிழரின் இசைக்கருவிகளில் மேளம் முக்கிய ஒன்றாகும். தமிழரின் மங்கல வைபவங்களோடு மேளமும் நாதஸ்வரமும் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன.
மேள இசைக் கலைஞர்களின் வருமானம் குறைவாக இருந்தமையால் இந்த துறையை விட்டு அநேகமானவர்கள் வருமானம் தரக் கூடிய வேறு தொழில் வாய்ப்பை தேடி சென்று விட்டனர். இருந்தும் இசையே தமது உயிரெனக் கொண்ட சிலர் மட்டும் மேளம், நாதஸ்வர இசைத்துறையை விட்டு இன்னும் விலகவில்லை.
மலையகத்தில் நூற்றுக்கணக்கான மேளவாத்திய இசைக் கலைஞர்கள் உள்ளனர். இவர்களில் ஒருசிலர் மட்டுமே முறையாக சங்கீதம் பயின்றவர்கள். ஏனையவர்கள் கேள்வி ஞானத்தில் வந்தவர்கள்.
இந்தியாவில் இருந்து ஆங்கிலேயர் தோட்ட வேலைகளுக்காக மக்களை அழைத்து வந்த போது இந்த இசைக்கலைஞர்களும் கூடவே வந்தனர். இவர்கள் மூலமாக பரம்பரை பரம்பரையாக இந்தக் கலை அடுத்த தலைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேளவாத்தியக் கலையில் புதிதாக ஆர்வம் கொண்டு இத்துறையில் வந்து பிரகாசிப்பவர்களும் உள்ளனர்.
ஆனாலும் பரம்பரை பரம்பரையாக இந்த கலைத்துறையில் ஈடுப்படுபவர்களே அதிகம்.
மேளவாத்தியக் களைஞர்கள் எத்தனை வறுமை வந்தாலும் தமது பெண் பிள்ளைகளை சாதாரணமாக கூலித் தொழிலுக்கு அனுப்புவதுஇல்லை. நெற்றி நிறைய திருநீறு பூசி, மங்கல பொட்டு வைத்து வேட்டி சால்வையுடனேயே இருப்பர். வெளியில் செல்லும் போது வேட்டி அணிந்தே செல்வர்.
தமது கலாசாரத்தை இன்றும் இவர்கள் காத்து வளர்த்து வருகின்றனர். மலையகத்தில் மேளம், நாதஸ்வரம் வாத்தியக் கலைஞர்களின் வாழ்க்கை முறை தனித்துவமானதாகும். கொரோனா தொற்று ஏற்பட முன்னர் இவர்கள் ஆலய திருவிழாக்களுக்காக நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் செல்வதுண்டு. ஆலய திருவிழாக்கள் முடிவுறும் வரை இவர்கள்தான் அந்த ஊரில் கதாநாயகர்களாக விளங்குவர். அவர்களுக்கு வருமானமும் கிடைத்து வந்தது.
ஆனால் கொவிட் தொற்று காரணமாக ஆலய உற்சவங்கள் தற்போது எளிமையாக நடத்தப்படுவதால் மேள, நாதஸ்வரக் கலைஞர்கள் இங்கு வருமானம் இழந்துள்ளனர்.
நவராஜா, தெல்தோட்டை