கொரோனாவை கட்டுப்படுத்தாமல் தளர்வுகளை அறிவிப்பது ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் முதன் முதலில் வெளிப்பட்டு ஏறத்தாழ 9 மாதங்கள் ஆகியுள்ள போதிலும், வைரஸ் தொற்று பரவல் பல நாடுகளில் இன்னும் உச்சகட்டமாக உள்ளது.
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முதலில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொண்டு வந்த நாடுகள், பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு தளர்வுகளை அறிவித்து திறந்து விட்டன. இந்தியாவிலும் ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தாமல் கட்டுப்பாடுகளை தளர்த்தி திறந்து விடுவது பேரழிவிற்கான செயல் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் ஆதனோம் கேப்ரியேசுஸ் கூறுகையில்,
“ பெருந்தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக எந்த நாடும் சொல்ல முடியாது. உண்மை என்னவெனில் இந்த வைரஸ் மிக எளிதாக பரவும். எனவே, கொரோனாவை கட்டுப்படுத்தாமல், திறந்து விடுவது என்பது பேரழிவிற்கான செயலாகும். மக்கள் அதிக அளவு கூடும் இடங்களில் இருந்தே பெரிய அளவில் தொற்று பரவல் ஏற்படுகிறது” என்றார்.