கொரோனா கண்காணிப்புக்கு கொட்டகலையில் 12 பேர் கொண்ட குழு நியமனம்

கொட்டகலை பிரதேச சபை ஊடாக கொரோனா தொடர்பான முழு நேர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 12 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான அவசரக் கூட்டம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

பிரதேச சபைத் தலைவர் தலைமையில் செயலாளர், ஆயுர்வேத வைத்தியர், பொது சுகாதார உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ உதவியாளர்கள் உட்பட 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

கொட்டகலையில் ஒருவரும், தலவாக்கொல்லை தெவிசிரிபுர பகுதியில் இருவரும் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளார்கள். அத்தோடு 74 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிதல், தனிமைப் படுத்தப்படுபவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குதல், தொற்று நீக்கி கிருமி நாசினி தெளித்தல், நகரங்களுக்கும் தோட்டங்களுக்கும் வருகை தரும் மக்களுக்கு கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சுகாதார நடைமுறைகளை பின்பற்றும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்தல் முதலான வேலைத் திட்டங்களை இந்தக் குழுவினர் மேற்கொள்வார்கள்.

அத்தோடு கொட்டகலை பிரதேச சபையின் ஊடாக தோட்டங்களுக்கும் பாடசாலைகளுக்கும் கிருமி நாசினி தெளிப்பதற்கான மருத்துகளை பெற்றுக் கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தோட்ட நிர்வாகங்கள் கிருமி நாசினி தெளிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் வகையில் மக்களுக்கு ஆயுர்வேத மருந்தைப் பெற்றுக் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நகரங்களிலும் தோட்டங்களிலும் இடம்பெறும் நிகழ்வுகளில் குறைந்தளவு மக்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகளை மேற்கொண்டு சுகாதார நடைமுறைகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என்றும் பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles