கொரோனா’ வைரஸ் வேகமாக பரவினால் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கவேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அனில் ஜயசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டின் தற்போதைய சூழ்நிலையின் பிரகாரம் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கவேண்டிய தேவை ஏற்படவில்லை. ஓரிரு இடங்களிலேயே பிரச்சினை இருக்கின்றது. நாடு தழுவிய ரீதியில் வைரஸ் தாக்கம் இருந்தால்தான் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பரீசிலிக்ககூடியதாக இருக்கும்.
குறிப்பாக கொரோனா வைரஸ் பரவில் அதிகரித்தால் அவ்வாறான நடவடிக்கைகளுக்கு (ஊரடங்கு சட்டம்) செல்லவேண்டியேற்படும். அதற்கான தேவை தற்போது எழவில்லை. எதிர்காலத்திலும் அவ்வாறானதொரு நிலை உருவாகாது என நம்புகின்றோம்.
அதேவேளை, அநுராதபுரம் ராஜாங்கனை பகுதி தற்போது முடக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது. மூன்று பிரிவுகளில் வாழும் சுமார் 12 ஆயிரம் பேர் வாழ்கின்றனர். எவரும் வெளியில் செல்லமுடியாது. வெளியில் இருந்து எவரும் உள்ளே வரமுடியாது.
ஏனைய பிரதேசங்களிலும் எவராவது அடையாளம் காணப்பட்டால் இதே நடைமுறை தொடரும். இவ்வாறு செய்ததால்தான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கமுடியும்.” -என்றார்.