கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் மரணங்கள் தொடர்பான தகவல்கள் ஏன் நள்ளிரவில் வெளியிடப்படுகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வினா எழுப்பினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இந்த அரசாங்கத்துக்கு எந்தவொரு விடயத்திலும் வெளிப்படைதன்மை இல்லை. இன்று கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் மரணங்கள் தொடர்பான தகவல்கள்கூட நள்ளிரவில்தான் வெளியிடப்படுகின்றன.
அதாவது இரவு 10.30 மணி செய்தியும் முடிவடைந்த பின்னரே அறிக்கை வெளியாகின்றது. அதுவும் நள்ளிரவு பார்த்து வெளியிடப்படுகின்றது. கடந்த சில நாட்களாக இவ்வாறுதான் நடைபெறுகின்றது. எனவே, மக்களுக்கு உரிய வகையில் தகவல்கள் சென்றடையக்கூடாது என்ற நோக்கிலா இவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என்ற சந்தேகம் எமக்கு ஏற்படுகின்றது. அத்துடன், பாரதூரத்தன்மையை மூடிமறைக்கும் முயற்சியாகக்கூட இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
நள்ளிரவில் வெளியிடாமல் காலைவேளையில் வெளியிட்டால் என்ன எனவும் கேட்கவிரும்புகின்றேன்.” – என்றார்.