” வைரசுடனேயே நாம் போராடுகின்றோம். எனவே, எமது கட்டுப்பாட்டைமீறி எந்நேரத்தில் வேண்டுமானாலும் அது சமூகத்துக்குள் பரவக்கூடும். ஆகவே, சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுங்கள்.”
இவ்வாறு சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி அவதானமாக செயற்படுங்கள், அவ்வாறு இல்லையேல் சமூகத்தொற்று ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கையை நாம் தொடர்ச்சியாக விடுத்திருந்தோம். அதுமட்டுமல்ல வைரஸ் என்பது எமது கட்டுப்பாட்டைமீறி பரவக்கூடும் எனவும் எச்சரித்திருந்தோம். அவ்வாறானதொரு நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
எனவே, அநாவசியமாக பொதுவெளியில் நடமாடுவதை தவித்துக்கொள்ளுங்கள், வெளியில்வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணியுங்கள், கைகளை சவக்காரமிட்டு கழுவுங்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றுங்கள் போன்ற ஆலோசனைகளை மீண்டும் வலியுறுத்துகின்றோம். நிறுவனங்களிலும் சுகாதார நடைமுறை பின்பற்றப்படவேண்டும்.
நிறுவனங்களுக்கு வருபவர்களின் பெயர், விபரங்கள் பதிவுசெய்யப்படவேண்டும், உடல் உஷ்ணம் கணிக்கப்படவேண்டும்.
‘கொரோனா’ வைரஸை ஒழிப்பதற்காக சுகாதார அமைச்சும், அரசும் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.
