‘கோட்டாவை வீட்டுக்கு அனுப்புவதால் பிரச்சினை தீராது’

நாட்டின் தற்போதைய நிதி நெருக்கடிக்கு அரசாங்கம் தனியே பொறுப்புக் கூற முடியாது பாராளுமன்றத்தின் ஊடாக அதற்கு தீர்வு பெற்றுக் கொள்வது அவசியம். 1978 முதல் ஆரம்பமான இந்த நெருக்கடி நிலை 2015 ஆம் ஆண்டு உக்கிரமடைந்தது

நாடு சுமக்க முடியாத அளவில் கடன்களை கடந்த அரசாங்கம் பெற்றுக் கொண்டதன் விளைவையே இன்று அனுபவிக்க நேர்ந்துள்ளது என பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் 45 ஆவது சரத்திற்கிணங்க நிதி தொடர்பான பொறுப்பு பாராளுமன்றத்திற்கே உரியது. அதற்கிணங்க ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும் அதற்கான பொறுப்பு உள்ளது.

நாடு சுதந்திரமடைந்ததற்கு பின்னர் கடன் பெற்றுக் கொள்ளாத எந்த அரசாங்கமும் கிடையாது. வரவுக்கு மேல் செலவு என்ற நிலையே தொடர்கிறது.கடனைப் பெற்றுக் கொண்டு அதற்கான வட்டியையும் முதலையும் செலுத்த நேரிட்டுள்ளது.
எமது ஏற்றுமதி வருமானம் 10 பில்லியனாக உள்ள நிலையில் இறக்குமதிக்கான செலவு 22 பில்லியனாக உள்ளது.

தற்போது நாட்டில் இடம்பெறுவது அரசியல் நெருக்கடி அல்ல. தொழில்நுட்ப நெருக்கடியே. நிதி முகாமைத்துவம் அவசியமாகிறது. அதற்கு தீர்வு காண்பதில் பாராளுமன்றம் முன்னின்று செயற்பட வேண்டும்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்புவதால் நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கோ பால்மா நெருக்கடிக்கோ தீர்வு கிடைக்காது.

இது தேசிய நெருக்கடியாக கவனத்திற் கொண்டு அனைவரும் இணைந்து இந்த நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டும்.
அதேபோன்று நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் உருவாக்கப்பட்டதல்ல. “- என்றார்.

Related Articles

Latest Articles