சஜித்துக்கு பாடம் கற்பிக்க தயார்!

2022ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போது பாராளுமன்ற அதிகாரத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த பாடுபட்டதாகவும், இன்று நாட்டைக் கட்டியெழுப்பும் புரட்சியை முன்னெடுப்பதற்காக மக்களின் ஆணையைக் கோருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி போட்டியில் இருந்து நான் ஒதுங்கப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தி பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, தான் சஜித் மற்றும் அனுரவைப் போன்று ராஜினாமா செய்யும் அல்லது ஓடிப்போகும் நபரல்ல என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பின்வாங்கி ஓடிச் செல்லாது துணிச்சலோடு முன்நோக்கிப் பயணிக்கும் பாடத்தை மட்டுமே சஜித்திற்கு கற்பிக்க முடியாமல் போனதாக தெரிவித்த ஜனாதிபதி, அதனை கற்பதற்காக தம்முடன் இணைந்து கொள்ளுமாறும் அவருக்கு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் இன்று (15) நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

சஜித்தும் அநுரவும் மாற்றம் பற்றி பேசினாலும், நாட்டிற்கு நடைமுறைச் சாத்தியமான வேலைத் திட்டமே தேவை எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்வரும் 5 வருடங்களில் இந்த நாட்டில் பொருளாதார புரட்சியை ஏற்படுத்தி புதிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதாக மக்களுக்கு உறுதியளித்தார்.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் அனுஷ விமலவீர, தேசிய மக்கள் சக்தியின் குண்டசாலை தொகுதி அமைப்பாளர் சிசிர குமார செம்புவத்த மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் முஸ்லிம் விவகார செயலாளர் ஒ.கே. நவாஸ் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து இணைந்து கொண்டனர்.

Related Articles

Latest Articles