” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எனது கனவு.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க நேற்று தெரிவித்தார்.
” ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி என பார்த்துக்கொண்டிருப்பதைவிடவும் நாட்டுக்காக சேவை செய்யக்கூடிய நேரமே இது. அதனால்தான் பொது இணக்கப்பாட்டுடன் நிதி பற்றிய குழுவின் தலைமைப்பதவியை ஏற்க தீர்மானித்தேன்.
ஹர்ஷ டி சில்வாவுக்கு தலைமைப்பதவி கிடைக்காது என்பது எனக்கு தெரியும். அதனால்தான் நான் ஏற்றேன். இன்று பதவி விலகிவிட்டேன். ஆனால் ஆளுங்கட்சி எம்.பியொருவர் தலைவராக செயற்படும் நிலை உருவாகியுள்ளது.
எனக்கு கட்சி மாறும் எண்ணம் இல்லை. ரணில் விக்கிரமசிங்கவும், சஜித் பிரேமதாசவும் இணைய வேண்டும் என்பதே எனது கனவு.
தப்பிதவறியேனும் ஜே.வி.பி. ஆட்சிக்கு வந்தால் நாட்டுக்கு ஆபத்து. எனவேதான் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைய வேண்டும் எனக் கூறுகின்றேன்.” – எனவும் மயந்த திஸாநாயக்க குறிப்பிட்டார்.
