” ஊழல் அற்ற தலைவரான சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவோம். அவர் தலைமையில் நல்லாட்சியை உருவாக்குவோம். அதற்கு மலையக மக்கள் ஆதரவாக நிற்பார்கள்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தலவாக்கலையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 700 ரூபா வழங்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இதொகாவினருடன் இணைந்து அறிவித்தார். ஆனால் இதுவரையில் ஆயிரத்து 700 ரூபா கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஆயிரத்து 700 ரூபா பற்றி பேசப்படும் என தற்போதைய ஜனாதிபதி கூறுகன்றார். அது எப்போது கைகூடும் என்பது தெரியவில்லை. இன்று பொருட்களின் விலைகள் எகிறியுள்ளன. இதனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு சமாளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது நுவரெலியா மாவட்ட மக்கள் சஜித் பிரேமதாசவுக்கு பேராதரவு வழங்கினார்கள். நாம் என்றும் மக்களுடன்தான் இருப்போம்.
மலையக மக்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகம் பேசினார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. உகண்டாவில் உள்ள ராஜபக்சக்களின் பணம் கொண்டுவரப்படும் என்றார்கள். அதுவும் நடக்கவில்லை. தேர்தல் நெருங்கும்வேளை ஏமாற்றுவித்தையாக எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது.” – என்றார்.