எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு சவால் விடுத்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரான பாலித ரங்கே பண்டார.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி – கூட்டணியின் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை ஐக்கிய மக்கள் சக்தி பெயரிட்டுள்ளது.
எனினும், ரணில் விக்கிரமசிங்க களமிறங்கினால் சஜித் பிரேமதாச போட்டியிடமாட்டார் என பாலித ரங்கே பண்டார அறிவித்தார். இக்கருத்தை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்திருந்தது. எனினும், பாலித ரங்கே பண்டார மீண்டும், மீண்டும் அதே கருத்தை கூறிவருகின்றார்.
இந்நிலையில், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமாதாச எப்படியும் போட்டியிடமாட்டார் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன் என்று பாலித ரங்கே பண்டார மீண்டும் குறிப்பிட்டுள்ளார்.
” இவ்விவகாரம் தொடர்பில் எந்தவொரு தொலைக்காட்சியிலும் சஜித்துடன் விவாதம் நடத்துவதற்கு தயாராகவே இருக்கின்றேன், இந்த விடயம் பற்றி கதைப்பதற்கு அவருக்கு அச்சம் எனில், வேறு விடயம் பற்றி கலந்துரையாடுவதற்காகவும் அவர் விவாதத்துக்கு வர வேண்டும்.” – எனவும் ரங்கே பண்டார குறிப்பிட்டார்.
