சஜித் களத்தில் – ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம்மீது நீர்த்தாரை பிரயோகம்….!

அரசுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம்மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுவந்த இந்த அரசுக்கு மக்கள் ஆணை இல்லை, எனவே, தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தியும், மக்கள் பிரச்சினைக்கு தீர்வுகளை கோரியுமே பிரதான எதிர்க்கட்சியால் இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

கொழும்பு, விகாரமஹாதேவி பூங்காவுக்கு முன்னால் எதிர்ப்பு பேரணி ஆரம்பமானது. பேரணி ஆரம்பமாகி சற்று நேரத்துக்கு பின்னரே நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெருமளவு பொலிஸாரும், கலகம் அடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இராணுவரும் பாதுகாப்பு கடமையில் இறங்கியுள்ளனர் என தெரியவருகின்றது.
பேரணி தற்போது கொள்ளுப்பிட்டிய நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது. எனினும், போராட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை தாக்குதல் நடத்திவருகின்றனர்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட தலைவர்களும் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.

அதேவேளை, திர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக நீதிமன்ற இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாளிகாவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முஸ்லிம் பொது மையவாடி தொடக்கம் பிரதீபா மாவத்தை, சத்தர்ம மாவத்தை, ஜயந்த வீரசேகர மாவத்தை, மில்டன் பெரேரா மாவத்தை, ஜும்மா சந்தி ஊடாக சங்கராஜ மாவத்தை வரையான பகுதிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட தடை விதித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொழும்பு இலக்கம் 04 நீதவான் எல்.மஞ்சுள இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்டோருக்கு எதிராக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சில வீதிகளுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விகாரமஹாதேவி பூங்கா பகுதியில் இருந்து போராட்டக்காரர்கள் முன்னோக்கி செல்வதை தடுக்கும் வகையிலேயே பொலிஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

 

Related Articles

Latest Articles