விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா சபாயக என்ற அரசியல் கூட்டணியை தமது கூட்டணியுடன் இணைத்துக்கொள்வது தொடர்பில் இன்னும் பேச்சு நடத்தப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கூட்டணியில் இணைத்துக்கொள்ள வேண்டிய தரப்புகள் தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் கட்சி தலைமைக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும், உத்தர லங்கா சபாகயவுடன் பேச்சு நடத்தப்படவில்ல.
கூட்டணி அமைக்கும்போது நாம் விழிப்பாகவே இருப்போம். ஏனெனில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களை இணைக்க முடியாது. ஊழல், மோசடிகள் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும்.
எது எப்படி இருந்தாலும் தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் கட்சி தலைவருக்கே உள்ளது.
எமது கொள்கையுடன் இணைந்து பயணிக்க கூடியவர்களே இணைத்துக்கொள்ளப்படுவார்கள். ஏனெனில் நாட்டைக் கட்டியெழுப்ப புரிந்துணர்வு என்பது அவசியம்.
சஜித் பிரேமதாசதான் ஐக்கிய மக்கள் சக்தி – கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர். இதில் மாற்றம் இல்லை. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க எந்த விதத்திலும் சவாலாக இருக்கமாட்டார்.” – என்றார்.
