ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணைவது உறுதியாகியுள்ளது. சஜித் பிரேமதாசவின் தலைமையின்கீழ், ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் சந்திப்பு நடைபெற்றது.
இச்சந்திப்பு தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே ஹரின் பெர்ணான்டோ மேற்கண்டவாறு கூறினார்.
“எதிர்க்கட்சி தலைவருடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்கும். இது பற்றி கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு அவர் தெரியப்படுத்துவார்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணைந்தாலும் பொதுவிடயங்களின்போது ஏனைய கட்சிகளையும் இணைத்துக்கொண்டு கூட்டு பயணம் இடம்பெறும்.
மீண்டும் நாடாளுமன்றம் வருவதில் ரணில் விக்கிரமசிங்க ஆர்வம் காட்டவில்லை. வலுவானதொரு கூட்டு எதிரணியை உருவாக்கவே அவர் முற்படுகின்றார்.
எனவே, சஜித்தின் தலைமையின்கீழ் ரணிலின் ஆலோசனையுடன் இணைந்து பயணித்தால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு அரசியல் ரீதியில் சவால் விடுக்ககூடியதாக இருக்கும்.” – எனவும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.
