உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சனல் – 4 வீடியோ அப்பட்டமான பொய்யாகும். அதன் பின்புலம் என்னவென்பதை விரைவில் அம்பலப்படுத்துவோம் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே மொட்டு கட்சி எம்.பிக்களான மஹிந்தானந்த அளுத்கமகே , சரத் வீரசேகர ஆகியோர் சனல் 4 காணொளி தகவல்களை நிராகரித்தனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மஹிந்தானந்த அளுத்கமகே,
” ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை வெற்றிபெறவைப்பதற்காகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்ற போலியான தகவல் முன்வைக்கப்பட்டுள்ளது. தெற்கில் சிங்கள, பௌத்த தலைவரை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கான திட்டமே இதுவெனவும் அந்த 5 நிமிட காணொளியில் விவரிக்கப்பட்டுள்ளது.
வெள்ளைக்கொடி ஏந்திவந்தவர்களை சுட்டுக்கொன்ற இராணுவம் உள்ள நாடுதான் இலங்கை என காணொளிகளை வெளியிட்ட சனல் 4 ஊடகம்தான் தற்போது இந்த காணொளியையும் வெளியிட்டுள்ளது.
சனல் 4 ஊடாக குற்றச்சாட்டை முன்வந்துள்ள மௌலானா என்பவர் சுவிட்ஷர்லாந்தில் தஞ்சம் கோருபவர். அவரது வங்கி கணக்கில் கோடி கணக்கில் பணம் இருக்கின்றது. அவர் நிதி மோசடியில் ஈடுபட்டவர். அந்நபருக்கு எதிராக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் உள்ளன. இப்படியான நபர்தான் தெற்கில் சிங்கள, பௌத்த தலைவரை கொண்டுவருவதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டது எனக் கூறுகின்றார்.
2018 உள்ளாட்சிசபைத் தேர்தலில் மொட்டு கட்சி அமோக வெற்றிபெற்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னரே எமக்கு மக்கள் ஆணை கிடைத்துவிட்டது. எனவே, இப்படியான செயல்களில் ஈடுபட வேண்டிய தேவை எமது தரப்புக்கு கிடையாது.
ஒரு சிங்கள பௌத்த தலைவரை ஆட்சிக் கொண்டுவருவதற்கு எதற்காக முஸ்லிம் அடிப்படைவாதிகள் 9 பேர் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்? அவ்வாறு செய்வார்களா? அவர்களுக்கு மூளை இல்லையா? இதை யார் நம்புவது? தற்கொலை குண்டுதாரர்கள் தாக்குதலுக்கு முன்னர் காணொளியொன்றை வெளியிட்டனர். அதில் காரணமும் கூறப்பட்டுள்ளது. அடிப்படைவாதிகளின் தேவைக்காகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஜெனிவா தொடர் நடைபெறும் காலப்பகுதியில் சனல் – 4 இப்படியான காணொளிகளை வெளியிடுவது வழமை. இதன்பின்னணியில் டயஸ்போராக்களும், என்.ஜி.ஓ. காரர்களுமே உள்ளனர். நாட்டில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கம். நாட்டில் ஸ்தீரமற்ற தன்மையை ஏற்படுத்தபார்க்கின்றனர். டயஸ்போராக்களிடம் சம்பளம் வாங்கும் என்ஜஓ காரர்கள் மக்கள் மத்தியில் தவறான கருத்தை விதைப்பதற்கு முற்படுகின்றனர்.
எனவே, இதன் பின்னணியில் உள்ள சகல தகவல்களையும் எதிர்காலத்தில் வெளிப்படுத்துவோம்.” – என்றார் மஹிந்தானந்த அளுத்கமகே.
சரத்வீரசேகர கருத்து வெளியிடுகையில்,
“ இதற்கு முன்னரும் சனல் 4 சில வீடியோக்களை வெளியிட்டுள்ளன. அவை போலியானவை என்பதை நிரூபித்துள்ளோம். சிங்கள, பௌத்த தலைவரை கொண்டுவருவதற்காக முஸ்லிம்கள் தற்கொலை செய்துகொள்வார்களா? எமது நாட்டு இராணுவத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலேயே இந்த செயல் செய்யப்பட்டுள்ளது.” – என்றார்.
