நாளுக்கு நாள் கூட்டம் அலைமோதுவதால் சபரிமலையில் 10 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.
2022-2023 ஆம் ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலை கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் திகதி திறக்கப்பட்டது.
41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகத்திற்கு பிறகு கடந்த மாதம் 27 ஆம் திகதி மண்டல பூஜை நடந்தது. பிறகு அன்றைய தினம் இரவு நடை அடைக்கப்பட்டது.
பின்னர் மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் 30 ஆம் திகதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
பக்தர்களின் கூட்டம் கட்டுக் கடங்காமல் இருப்பதால் இந்த சீசனின் பாதியில் தரிசனம் செய்ய கூடுதலாக 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் 8 முதல் 10 மணி நேரம் வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
தினமும் 1 லட்சம் பக்தர்கள் வருகிறார்கள். இதற்கிடையே மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் வருகிற 14 ஆம் திகதி நடைபெறுகிறது. மகர விளக்கு தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பத்தனம்திட்டை மாவட்டம் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.