சப்ரகமுவ மாகாண தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கு உயர்தர விஞ்ஞான, கணித பிரிவு பிரச்சினைகள் தொடர்பாக கல்வி அமைச்சர் ஜி எல் பீரிசுக்கு, இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது என்று சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
மேற்படி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
சப்ரகமுவ மாகாணத்தில் உயர்தர கணித மற்றும் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்பதற்கு தமிழ் மொழி மூல மாணவர்களுக்கு எவ்வித பாடசாலைகளும் இன்மை தொடர்பாக கவனத்திற்கு கொண்டு வருவதோடு இது தொடர்பான தீர்வினைப் பெற்றுக்கொள்ள எமது சங்கமானது முன்னின்று செயற்படும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
2022ஆம் ஆண்டிற்கான உயர்தர மாணவர்களது கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பமாகி கொண்டிருக்கும் நிலையில் தமிழ் மொழி மூல மாணவர்களில் பெரும்பாலானோர் இவ்வாய்ப்பினை இழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இப்பிரச்சினையானது நீண்ட காலமாக உள்ளதோடு இதற்கான தீர்வினை காணாமையினால் இன்று இப்பிரச்சினை பாரியளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
அத்தோடு தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கு அநீதி இழைத்திருப்பதோடு கல்வி கற்பதற்கான அடிப்படை உரிமையும் மீறப்பட்டுள்ளது.
72 வருடம் கடந்த நிலையில் இலங்கையின் முதலாளித்துவ ஆட்சியார்கள் இத்தகைய சிறிய பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமலிருப்பது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.
கடந்த காலங்களில் மாணவர்களில் ஒரு பகுதியினர் வேறு மகாணங்களுக்குச் சென்று கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் குறித்த மாகாணங்களில் நிரந்தர வசிப்பிடமாக கொண்ட மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவின் போது அசாதாரணங்களும் முகம் கொடுப்பதாக குறிப்பிட்டு வெளி மாகாண மாணவர்களை உள்வாங்க முடியாது என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் பாடசாலைகளுக்கான அனுமதிகளை மாணவர்கள் இழந்துள்ளனர்.
ஆகையினால் இவ்வருடம் இது தொடர்பாக கவனத்தை செலுத்தி இவ்வாறு கற்றலுக்காக இடர்படும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக குறித்த வெளி மாகாண கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடி, சப்ரகமுவ மாகாண தமிழ் மொழி மூல விஞ்ஞான மற்றும் கணித பிரிவிற்கான ஆசிரியர் வளத்தையும், பாடசாலைகளுக்கான வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்கும் வரை குறித்த வெளி மாகாண கல்வி அதிகாரிகளுக்கு சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த உயர்தர பிரிவிற்கான மாணவர்களுக்கான அனுமதியை வழங்க ஆணையிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
என கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது என சங்கத்தின் உப தலைவர் தெரிவித்தார்.