” நாட்டில் சமரஷ்டி முறைமை இருந்திருந்தால் கொரோனாவால் வடக்கு, கிழக்கில் பெரும் சீரழிவுகள் ஏற்பட்டிருக்கும்.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ஸ தெரிவித்தார்.
கம்பஹாவில் நேற்று (27) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” அரசியலமைப்பு திருத்தங்கள்மூலம் நாட்டில் ஆட்சி முறைமை பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அரசியல் ரீதியிலும் பலவீனப்படுத்துவதற்காகவே மாகாணசபைமுறைமை கொண்டுவரப்பட் டது.
நாம் சமஷ்டி முறைமைக்கு சென்றிருந்தா ல் இந்நேரம் என்ன நடந்திருக்கும்? கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக வடக்கு, கிழக்கில் ஒரு விதத்திலும், தெற்கில் இன்னுமொரு விதத்திலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கும்.
வடக்கு, கிழக்குக்கு இந்தியாவில் இருந் து படகுகளில்வந்து, குடியேறியிருப்பார்கள். நடக்கவேண்டிய எல்லா விபரீதங்களும் நடந்திருக்கும்.
அதேவேளை, அரசியலமைப்பில் உள்ளவாறு 13ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று சஜித் பிரேமதாச குறிப்பிடுகின்றார். அதாவது பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களும் வழங்கப்படும் என்பதையே அவர் குறிப்பிட்டுள்ளார். இது அரசியல் ரீதியில் ஆட்சியை பலவீனப்படுத்தும் செயலாகும்.” – என்றார்.