சமஷ்டி குறித்து சஜித், அநுரவின் நிலைப்பாடு என்ன?

இலங்கைக்கு சாபக்கேடாக மாறியுள்ள ஒற்றையாட்சி முறைமையை நீக்க வேண்டும் என பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுக்க வேண்டும். முஸ்லிம் தலைவர்களும் இதனை செய்ய வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

அத்துடன், முதுகெலும்பிருந்தால் ஒற்றையாட்சி நீக்கப்பட்டு, சமஷ்டி அரசமைப்பு கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பை சஜித், அநுர ஆகியோர் விடுக்கப்பட்டும் எனவும் அவர் சவால் விடுத்தார்.

இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,

“ தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலையை கட்டவிழ்த்து விட்டீர்கள். 48 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டுவரை தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்து ஆட்சியை தக்கவைத்துக்கொண்டீர்கள். அதன்பின்னர் பொருளாதாரத்தில் உச்சத்தில் இருந்த முஸ்லிம் மக்கள் குறிவைக்கப்பட்டனர். அதற்காக திட்டமும் வகுக்கப்பட்டது. அந்த திட்டத்தில் 2019, 2020 களில் வெற்றியும் கண்டீர்கள். பொருளாதாரத்தில் உச்சத்தில் இருந்த முஸ்லிம் மக்களை பாதாளத்துக்கு கொண்டுவந்துவிட்டீர்கள்.

தனக்கு சூத்திரதாரிகளை தெரியும் என மைத்திரிபால சிறிசேன சொல்கின்றார். தாக்குதலுக்கு பின்னரும் அவர் பதவியில் இருந்தார். எனவே, அரச இயந்திரம் மற்றும் புலனாய்வு பிரிவை பயன்படுத்தி இதற்குரிய நடவடிக்கையை ஏன் அவர் எடுக்கவில்லை?

75 ஆண்டுகளாக இந்நாட்டை குட்டிச்சுவராக்கிக்கொண்டிருக்கும் இந்த ஒற்றையாட்சி முறைமையை மாற்றுமாறு பேராயர் கோரிக்கை முன்வைக்க வேண்டும். கத்தோலிக்க சமூகம்மீது கரிசனை கொண்டு இத்தாக்குதல் பற்றி பேராயர் தொடர்ச்சியாக பேசிவருகின்றார். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடக்ககூடாது என்றால் இந்த கோரிக்கையை விடுக்குமாறு அவரிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்கின்றேன்.

அதேபோல முஸ்லிம் தலைவர்களும் ஒற்றையாட்சி முறைமைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

சஜித் பிரேமதாசவாக இருக்கலாம், அநுரவாக இருக்கலாம், இவர்கள்கூட இது தொடர்பில் விசாரணை நடத்தமாட்டார்கள், ஏனெனில் இவர்கள்கூட இலங்கையானது சிங்கள, பௌத்த ஒற்றையாட்சிகொண்ட நாடாகவே இருக்க வேண்டும் எனக் கருதுகின்றனர். அவர்களிடம் நேர்மை இருந்தால் ஒற்றையாட்சி முறைமையை அழித்து, சமஷ்டி முறைமை கொண்டுவரப்படும் என அறிவிக்கட்டும். முதுகெலும்பிருந்தால் அவர்கள் இதனை செய்யட்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles