சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டமை மனித உரிமை மீறலாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் எவ்வித மதிப்பீடும் செய்யாமல் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியமையும் மனித உரிமை மீறலாகும் எனவும் அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
எவரேனும் ஒருவர் சமூக ஊடகங்களை பயன்படுத்தி மக்களை தவறாக வழிநடத்தினால் அவருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை தவிர்த்து ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களையும் முடக்குவது மனித உரிமை மீறலாகும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் அறிவித்தலுக்கமைய, சமூக வலைத்தளங்களை முடக்குவதற்கு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு எவ்வித உரிமையும் இல்லை என மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.