சர்வக்கட்சி அரசு மற்றும் சர்வக்கட்சி வேலைத்திட்டம் சம்பந்தமாக அனைத்து கட்சிகளுடனும் ஜனாதிபதி பேச்சுகளை நடத்திவருகின்றார். ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பிரதான கட்சிகளுடன் முதல் சுற்று பேச்சை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, ஜே.வி.பியினருடன் பேச்சு நடத்தவுள்ளார். சர்வக்கட்சி அரசில் இணைந்து, பதவிகளை ஏற்பதில்லை என்ற நிலைப்பாட்டிலேயே ஜே.வி.பி. உள்ளது. எனினும், கோப் குழு உட்பட நாடாளுமன்ற குழுக்களில் தலைமைப்பதவியை ஏற்பதற்கு அக்கட்சி தயாராக உள்ளது.
சர்வக்கட்சி அரசில் இணைவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பச்சைக்கொடி காட்டியுள்ளது. அக்கட்சியால் முன்னெடுக்கப்பட்ட ‘தேசிய சபை’ யோசனையை ஜனாதிபதி ஏற்றுள்ளார். 43 ஆம் படையணியின் செயலாளர் சம்பிக்க ரணவக்க, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஆகியோரும் சர்வக்கட்சி அரசில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
சஜித் தரப்புடன் கூட்டணி வைத்துள்ள சிறு கட்சிகளும் சர்வக்கட்சி அரசில் இணைந்து பதவிகளை பெறுவதற்கு தயார் நிலையில் உள்ளன. எனினும், 30 பேர்கொண்ட அமைச்சரவேயை அமைக்கப்படவுள்ளது. இதற்கிடையில் அமைச்சு பதவிகளை பெறுவதில் கடும் போட்டியும் ஏற்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 11 ஆம் திகதி நாடு திரும்புவார் எனக் கூறப்பட்டாலும், அடுத்த மாதமே அவர் வருவார் என தெரியவருகின்றது.