” தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் தேவைப்படின் சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவும் தான் தயங்கப் போவதில்லை.”
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இரு நாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள சமந்தா பவர், இன்று (11) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, சந்தித்து பேச்சு நடத்தியபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகத்தை பலப்படுத்த எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து பவருக்கு விளக்கமளித்த ஜனாதிபதி , உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பை பெறுவது தொடர்பிலும் எடுத்துரைத்தார்.
அத்துடன், 22ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனை நாடாளுமன்றம் நிறைவேற்றும் வரை காத்திருக்கிறோம். நிர்வாகத்திற்காக முதலாவது அமைச்சரவைக் கையேடு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதற்கமைவாக அமைச்சரவையின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலான நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.










