ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் செம்மணி விஜயத்தை தமிழ் மக்களுக்கு சாதகமான சமிக்ஞையாகவே தாம் கருதுவதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் வாழும் மக்கள் நீண்டகாலமாக முகங்கொடுத்துவரும் பிரச்சினைகளை சர்வதேச சமூகம் உணரத்தலைப்பட்டிருக்கிறது என்பதையும் அவரது பயணம் எடுத்துக்காட்டுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் இணையனுசரணையுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிராகரித்திருப்பதாகவும், இலங்கையில் ஆட்சிபீடமேறும் அரசாங்கங்களின் மேலாதிக்க சிந்தனை இப்போதும் மாறவில்லை என்பதைப் புரிந்துகொள்ளமுடிவதாகவும் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, உள்ளகப்பொறிமுறை ஊடாகவோ அல்லது கலப்புப்பொறிமுறை மூலமோ பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளமுடியாது . சர்வதேசத்தின் பங்கேற்புடன்கூடிய சுயாதீன விசாரணைப்பொறிமுறை ஒன்றையே உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் முன்மொழியவேண்டும் என சிறிதரன் எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.