மாலைதீவில் இடம்பெறவுள்ள தெற்காசிய கால்பந்து சம்மேளன (சாப்) சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை அணி விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான போட்டிகளை முடித்த இலங்கை அணிக்கு, அடுத்த முக்கிய தொடராக இந்த சாப் சம்பியன்ஷிப் தொடர் அமையவுள்ளது. இத்தொடர் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 16ஆம் திகதி வரை மாலைதீவு தேசிய கால்பந்து அரங்கத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த தொடருக்கான ஆரம்ப கட்ட குழாம் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டு, குறித்த வீரர்கள் உயிரியல் பாதுகாப்பு வலயத்திற்குள் தமது பயிற்சிகளையும் ஆரம்பித்தனர்.

ஆரம்ப கட்ட அணியில் உள்வாங்கப்பட்டு பயிற்சிகளுக்கு உள்நுழையும்போது மேற்கொண்ட முதலாவது பிசிஆர் பரிசோதனையின்போது ஷதுரங்க மதுஷான், அப்துல் பாசித் மற்றும் அசேல மதுஷான் ஆகியோர் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியமையினால், அவர்கள் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
அவர்களுக்குப் பதிலாக ஏற்கனவே தேசிய அணியில் விளையாடிய அனுபவம் கொண்ட எடிசன் பிகுராடோ மற்றும் திலிப் பீரிஸ் ஆகியோர் குழாத்தில் இணைக்கப்பட்டனர். அதில் திலிப் பீரிஸ் தற்போது வெளியி டப்பட்டுள்ள இறுதிக் குழாமில் உள்வாங்கப்பட வில்லை.
ஆரம்ப கட்ட அணியில் பெயரிடப்பட்ட வீரர்கள் கொழும்பில் உயிரியல் பாதுகாப்பு வலயத்தில் இருந்து பயிற்சிகளை மேற்கொண்ட பின்னர் மேலதிக பயிற்சிகளுக்காக கடந்த 19ஆம் திகதி சவுதி அரேபியாவின் ரியாத் நகருக்கு சென்றனர்.
இந்த பயணத்தில் மேற்கொண்ட விஷேட பயிற்சிகள் மற்றும் அந்நாட்டின் ஜுப்பா கால்பந்து கழகத்துடனான பயிற்சி ஆட்டம் என்பவற்றின் நிறைவில் தற்போது சாப் சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை இறுதி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப கட்ட அணியில் தெரிவு செய்யப்பட்டிருந்த கோல் காப்பாளர்களில் இளம் வீரர் நுவன் கிம்ஹான மற்றும் தனுஷ்க ராஜபக்ஷ ஆகிய இருவரும் குழாத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். எனவே, சுஜான் பெரேராவுடன் கவீஷ் பெர்னாண்டோ மற்றும் நுவன் அருனசிறி ஆகியோர் இறுதி 3 கோல் காப்பாளர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
மொஹமட் ஹஸ்மீர் (சீ ஹோக்ஸ்), அபீல் மொஹமட் (கொழும்பு) மற்றும் டிலிப் பீரிஸ் (ரினௌன்) ஆகியோரும் இறுதி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, அப் கண்ட்ரி லயன்ஸ் அணி வீரர் மொஹமட் சிபான் தேசிய அணிக்காக முதல் முறையாக இணைக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் இலங்கை 23 வயதின்கீழ் தேசிய அணிக்காக விளையாடியுள்ளார்.
நீண்ட காலம் தேசிய அணிக்கு விளையாடிய அனுபவம் கொண்ட எடிசன் பிகுராடோவும் ஒரு பெரிய இடைவெளியின் பின்னர் சாப் சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை அணியில் இணைக்கப்பட்டுள்ளமையினால், மீண்டும் தேசிய அணியில் இடத்தைப் பெற்றுள்ளார்.