சாமிமலையில் வேன் விபத்து – ஐவர் படுகாயம்! (படங்கள்)

மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியில் பாக்ரோ பகுதியில் நேற்றிரவு 11.45 மணியளவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஐவர் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

மாத்தறை கோட்டேகொட பகுதியிலிருந்து சிவனொளிபாதமலை யாத்திரைகளை மேற்கொண்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வேனே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேனில் 12 பேர் பயணித்துள்ளதாகவும், இதில் சாரதி உட்பட 5 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதோடு, ஏனையோர் சிறு காயங்களுடன் தப்பியுள்ளனர்.

விபத்து இடம்பெறும் போது அனைவரும் நித்திரையில் இருந்ததாக, அதில் பயணித்த ஒருவர் தெரிவித்தார்.

யாத்திரையை முடித்துவிட்டு பொகவந்தலாவ பலாங்கொடை வழியாக மாத்தறை செல்ல தீர்மானித்த இவர்கள் வழி தவறி சாமிமலை வீதியின் ஊடாக சென்ற வேளையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles