மஸ்கெலியா, சாமிமலை டீசைட் தோட்டத்தில் கடந்த மாதம் 28 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் இதுவரையில் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த தோட்டத்தைச்சேர்ந்த ஏழு பேர் , பேலியகொடை பகுதியில் நிர்மாணிக்கப்படும் கட்டடமொன்றில் கூலித்தொழிலாளிகளாக வேலைசெய்துள்ளனர்.எனினும், கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து ஊருக்கு திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து அவர்களும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் 28 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டனர். இன்றுடன் 15 நாட்கள் கடந்துள்ள நிலையிலும் இவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதா என்பதை கண்டறிவதற்கான பிரிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை.
இது தொடர்பில் தோட்ட நிர்வாகத்தால், மஸ்கெலியா பிரதேச சபை மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கு இரண்டு தடவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றும், இன்னும் உரிய பதில் கிடைக்கவில்லை எனவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.
” தோட்டத்தில் வேலை நாட்கள் குறைவு என்பதாலேயே பேலியகொடை பகுதிக்கு வேலைக்கு சென்றோம். அசாதாரண சூழ்நிலையில் திரும்பிவரவேண்டி ஏற்பட்டது. அவ்வாறு வந்தும் பல நாட்கள் ஆகிவிட்டன. இன்னும் எங்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை.
அந்த பரிசோதனை மேற்கொண்டு, முடிவு வந்ததால்தான் வேலை வழங்கப்படும் என தோட்ட நிர்வாகம் சொல்கின்றது. எனவே, எங்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும். வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.” – என்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.
சாமிமலை நிருபர் – ஞானராஜ்