மலைநாட்டில் மழையுடன்கூடிய சீரற்ற வானிலை தொடர்கின்றது. இந்நிலையில் இடையிடையே கடும் பனிமூட்டமும் ஏற்படுகின்றது. எனவே, மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி சாரதிகள் தமது வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்தவாறு பயணிக்குமாறு போக்குவரத்து பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் களுகல, பிட்டவல, கினிகத்தேனை,கடவளை,தியகல, வட்டவளை , ஹட்டன் ஆகிய பிரதேசங்களிலும்
ஹட்டன் நுவரெலியா வீதியில் குடாகம, கொட்டகலை, தலவாக்கலை, சென்கிளேயர், ரதெல்ல, நானுஓயா ஆகிய பகுதிகளிலும் அடிக்கடி கடும் பனிமூட்டம் காணப்படுவதால் வளைவுகள் நிறைந்த இவ்வீதிகளில் அவதானமாக வாகனம் செலுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.
மலையகத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் அடைமழை காரணமாகவும் கடும் குளிர் காரணமாகவும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
அடை மழையால் பல இடங்களில் மண்சரிவு அபாயமும் காணப்படுகின்றது.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன்