‘சிங்கராஜா வனாந்தர எல்லைகளில் தேயிலை செய்கை வேண்டாம்’

சிங்கராஜா வனாந்தர எல்லைகளில் தேயிலை செய்கை மற்றும் காடழிப்புக்களில் ஈடுபட வேண்டாம் என்று பெருந்தோட்ட நிர்வாகங்களுக்கு நீர்வளத்துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிங்கராஜா எல்லை கிராமங்களில் இடம்பெற்ற மரம் நாட்டும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வெளிநாட்டவர்கள் ஆதிக்க காலத்தில் நாட்டில் இருந்த இலட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு நாசமாக்கப்பட்டன. இப்பிரதேசத்தில் உள்ள காணிகளின் பிரதான உரிமை சிங்கராஜா வனத்திற்குரியதாகும்

1818 களில் இலங்கையை ஆண்ட வெளிநாட்டு சக்திகள் நாட்டிலுள்ள பல இலட்சம் மரங்களை வெட்டி சாய்த்தனர். இவ்வாறு வெட்டியழிக்கப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கும் பதிலாக 10 மரங்களை நடுவதே எனது இலட்சியமாகும். நீர்நிலைகளை முகாமைத்துவம் செய்யும் பொறுப்பை நீ ர் விநியோக திணைக்களத்துக்கு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்தாலோசிக்கவுள்ளேன்.

சிங்கராஜா வனத்தின் வளம் மிக்க பிரதேசங்களில் நீர் நிலைகள் வற்றிக்காணப்படுகின்றன. காடுகளை துப்புரவு செய்வதும் நீரை வெளியே எடுத்துச் செல்வதும் இந்நிலைமைக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நீரின் பெறுமதியை உணர்ந்து நாம் எமது பகுதிகளில் மிகுதியாக உள்ள மேலதிக நீரை கஷ்டப்படும் மக்களுக்கு முறையான விதத்தில் வழங்குவதற்கு கருணை காட்ட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles