சிட்னியில் 100 தடவைகள் துப்பாக்கிச்சூடு: பயங்கரவாதத் தாக்குதலா?

 

சிட்னி குரோய்டன் பூங்காவில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பயங்கரவாதத் தாக்குதல் அல்ல என உயர் மட்ட பொலிஸ் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சிட்னி மேற்கில் நேற்றிரவு இடம்பெற்ற இந்த பயங்கரமான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

பூங்காவை சூழவுள்ள பகுதிகளின் வீதிகள் மூடப்பட்டதுடன், பொது மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

60 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டார். அதி உயர் திறன் கொண்ட துப்பாக்கியால் அவர் 100 தடவைகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இரு பொலிஸ் வாகனங்கள் உட்பட பல வாகனங்கள் துப்பாக்கிச்சூட்டால் சேதமடைந்துள்ளன.

கூரைமீதிருந்தே குறித்த நபர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 50 வயது டாக்ஸி சாரதிக்கு வைத்திசாலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

துப்பாக்கிச்சூட்டுக்குரிய சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 20 பேர்வரை சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

 

Related Articles

Latest Articles