சிரியாமீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்!

 

சிரியாவில் ட்ரூஸ் மதத்தைச் சேர்ந்த ஆயுதம் ஏந்திய குழுவினர் மீது, அந்நாட்டு இராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில், ட்ரூஸ் மதத்தினருக்கு ஆதரவாக இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் மூவர் பலியாகியுள்ளனர். 30 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மேற்கு ஆசிய நாடான சிரியாவில், ஸ்வீடா மாகாணத்தில் ட்ரூஸ் மதத்தைச் சேர்ந்தவர்களும், சன்னி பெடோயின் பழங்குடியினரும் அதிகம் வசித்து வருகின்றனர்.

ட்ரூஸ் என்பது 10ம் நூற்றாண்டில் ஷியா முஸ்லிம் பிரிவில் இருந்து உருவான இஸ்மாயிலிசத்தை அடிப்படையாகக் கொண்டது.
ஆனால், இவர்கள் முஸ்லிம்கள் இல்லை.
சிரியாவில் நடந்த, 14 ஆண்டுகால உள்நாட்டு போரில் முன்னாள் ஜனாதிபதி பஷர் அல் அசாத் அரசுக்கு எதிராக ட்ரூஸ் மதத்தினர் போராடினர்.

இந்த நிலையில், சமீபத்தில் சன்னி பெடோயின் பழங்குடியினருக்கும் ட்ரூஸ் மதத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பும் ஆயுதங்களைக் கொண்டு தாக்கிக் கொண்டனர்.

இங்கு அமைதியை ஏற்படுத்த சிரிய ராணுவப் படைகள் அனுப்பப்பட்டன. அவர்களுக்கும் ட்ரூஸ் மதத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், நேற்று வரை 250 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக பிரிட்டனைச் சேர்ந்த போர் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ட்ரூஸ் மதத்தினருக்கு ஆதரவாக சிரியா மீது நேற்று அதன் அண்டை நாடான இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

தலைநகர் டமாஸ்கசில் உள்ள சிரிய ராணுவ அமைச்சகத்தின் வளாகம் மற்றும் ட்ரூஸ் மதத்தினர் உள்ள தெற்கு சிரியா நோக்கி சென்ற ராணுவத்தினரின் வாகனங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இது குறித்து இஸ்ரேல் ராணுவ அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கருத்து வெளியிடுகையில்,
‘ ட்ரூஸ் மதத்தினர் உள்ள பகுதிகளிலிருந்து சிரியப் படைகளை திரும்ப பெற வேண்டும். இந்த செய்தியை புரிந்துகொள்ளவில்லை என்றால் தாக்குதல் இன்னும் கடுமையாக இருக்கும்.” – என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையே ட்ரூஸ் பிரிவினர் உடன் போர் நிறுத்த முடிவு ஏற்பட்டதாக சிரியா கூறியுள்ளது.

Related Articles

Latest Articles