சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர்களில் ஒருவரான இக்பால் அத்தாஸ் (Iqbal Athas) இன்று (13) அதிகாலை காலமானார்.
மரணிக்கும்போது அவருக்கு 81 வயது என்பதுடன், அவர் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அன்னாரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை 9.00 மணி முதல் தெஹிவளை, ஹில் வீதியின், சிறிவர்தன வீதியில் அமைந்துள்ள இலக்கம் 11 C/1 இல் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்னாரது இறுதிச் சடங்குகள் இன்று (13) பிற்பகல் தெஹிவளை பெரிய பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்பால் அத்தாஸ் இலங்கையின் ஊடகத் துறையில், குறிப்பாக பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த ஆய்வுகளில் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.
இலங்கையின் ஊடகத்துறைக்கு இக்பால் அத்தாஸ் ஆற்றிய பணிகள் மற்றும் அவர் விட்டுச் சென்ற வெற்றிடம் ஈடுசெய்ய முடியாதது எனப் பல சிரேஷ்ட ஊடகவியலாளர்களும் அரசியல் பிரமுகர்களும் தமது அனுதாபச் செய்திகளில் தெரிவித்து வருகின்றனர்.
