சிறுவர்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தளத்திற்கு பதிவேற்றம் செய்வோர் தொடர்பான விசேட விசாரணை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஐ.பி. முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்கள் திரட்டப்பட்டுள்ளன – என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
நாட்டில் கடந்த ஜுன் மாதம் 17ம் திகதி முதல் ஜுலை மாதம் 27ஆம் திகதி வரையான காலப் பகுதியில் மாத்திரம், சிறுவர்கள் தொடர்பிலான பாலியல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்த 18,000த்திற்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சிறார்களின் படங்கள் ஏற்றப்பட்டுள்ளன. இலங்கையில் இருந்தே இவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன – எனவும் அவர் குறிப்பிட்டார்.