” சிறந்த தமிழ்த் தலைவர்களை பிரபாகரன் கொலை செய்துவிட்டார். அவர்கள் இருந்திருந்தால் உங்களால் (சிறிதரன்) நாடாளுமன்றம் வந்திருக்க முடியாது. உங்களைபோன்ற மக்கள் பிரதிநிதிகள் இருக்கும்வரை வடக்கு, கிழக்கு மக்களுக்கு ஒருபோதும் விடுதலை கிட்டாது. உங்களை போன்றவர்கள்தான் தமிழ் மக்களுக்கு சாபக்கேடு…”
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனை கடுமையாக விமர்சித்தார் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய சிறிதரன் எம்.பி., பயங்கரவாத தடைச்சட்டத்தை கடுமையாக விமர்சித்தார். சிறிதரன் எம்.பியின் உரையின் பின்னர் கருத்து வெளியிட்ட நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, சிறிதரன் எம்.பியின் கருத்துகளுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.
அவர் கூறியவை வருமாறு,
” பயங்கரவாத தடைச்சட்டத்தால்தான் இந்நாட்டில் படுகொலைகள் இடம்பெற்றன என்று கூற முற்படுகின்றார். பயங்கரவாத தடைச்சட்டம் இல்லாத நாடொன்றை கூறுங்கள்?
பிரபாகரன், துரையப்பாவை கோவிலுக்குள் வைத்து கொலை செய்தது பயங்கரவாத தடைச்சட்டத்தாலா? தமிழ்த் தலைவர்கள் பலரை கொலை செய்ததும் இச்சட்டத்தாலா?
அமிர்தலிங்கத்தை கொலை செய்தது யார்? அவரின் கட்சி செயலாளராக இருந்த யோகேஸ்வரனை கொலை செய்தது யார்?
கட்டுநாயக்க விமான நிலையம்மீது தாக்குதல் நடத்தி பொருளாதார சீரழிவை ஏற்படுத்திய பிரபாகரனின் செயல் சரியா?
ஆனந்த சங்கரி ஒருவர் எனது வீட்டுக்கு வந்தார். புலிகள் தன்னை கொலை செய்யவந்ததால் பின்கதவால் வந்து ஆட்டோவில் வந்து சேர்ந்ததாக கூறினார். அவரை சந்திரிக்காவிடம் அழைத்து சென்று, எம்.எஸ்.டி பாதுகாப்பை பெற்றுக்கொடுத்தேன். அந்த பாதுகாப்பு இன்னும் இருப்பதாக நம்புகின்றேன். ஆனால் அவரின் மகன் கெரி சங்கரி புலிகளை நியாயப்படுத்தி கருத்துகளை வெளியிடுகின்றார்? ஆனந்த சங்கரி தனது மகனின் முகத்தைக்கூட பல வருடங்களாக பார்ப்பதில்லை. தந்தையை கொலை செய்ய வந்தவர்களை எப்படி நல்லவர்கள் என பிரசாரம் செய்வது?
இது சிங்கள அரசு அல்ல. சிறிலங்கா அரசு. நீங்களும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு அனைத்து இன மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வாருங்கள். இவ்வாறு முட்டாள் தனமாக கதைக்க முற்படக்கூடாது.” – என்றார்.
