மட்டக்களப்பு, காத்தான்குடியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு போதனா வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது சகோதரியை பார்க்க கடந்த 4 ஆம் திகதி சென்ற குறித்த சிறுமி, இரண்டு நாட்கள் நண்பியின் வீட்டில் தங்கிய நிலையில், கடந்த 06 ஆம் திகதி மாலை ஆரையம்பதி செல்வா நகர் பகுதிக்கு சென்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதன்போது, அங்கிருந்த மூன்று இளைஞர்கள் சிறுமியை வழிமறித்து தாக்கி, அவர்களில் ஒருவரது வீட்டிற்கு கொண்டு சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் அந்த சிறுமி தனது தந்தையுடன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து, காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளுக்கமைய, 33 வயதான திருமணமான ஒருவரும், 26 வயதான இருவரும் கைது செய்யப்பட்டனர்.
மூன்று சந்தேகநபர்களும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.










