கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிவனொளிபாத மலை யாத்திரை இம்முறை சுகாதார பாதுகாப்புகளுடன் ஆரம்பமாகவுள்ளது.
சிவனொளிபாத மலை யாத்திரைக்காக இரத்தினபுரி மாவட்டத்தின் 4 வழிகளில் புனித புத்தர் சிலை மற்றும் புனித பொருட்களைத் தாங்கி செல்லும் பெரஹராக்களில் கடும் சுகாதார வழிமுறை சட்ட திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் வீதிகளில் வாகனங்களை நிறுத்தி அன்னதானங்கள், பூஜைகள் நடத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
சப்ரகமுவ ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதற்கிணங்க இம்முறையும் குருவிட்ட, அவிசாவளை, பலாங்கொைட, பலாபத்வல வழிகள் ஊடாகச் செல்லும் பெரஹரா ஊர்வலங்களை கடந்த வருடங்களைப் போல் வீதிகளில் நிறுத்தாமல் இருக்கவும் வீதிப் பூஜைகள் மற்றும் அன்னதானகளை நடத்துவதை தடை செய்யவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டுள்ளன.
அத்துடன் பெரஹராக்கள் செல்வதில் வாகனங்கள் மற்றும் பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதுடன், மேற்படி பெரஹரா ஊர்வலங்களில் செல்ல விரும்புவோர் தத்தமது பிரதேச செயலகங்களில் தமது பெயரைப் பதிவு செய்து அதற்கான அனுமதி சான்றிதழை பெறுவது அவசியமாகும்.
வழமையான பூஜைகள், அன்னதானங்களுக்குப் பதிலாக முகக்கவசங்கள் மற்றும் செனிடைசர் உபகரணங்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கலாம் எனவும் இங்கு ஆலோசிக்கப்பட்டது.
சிவனொளிபாதமலை யாத்திரை இம்மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.