சீனாவின் PLA உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கும், பிரித்தானிய முன்னாள் ராணுவ விமானிகள்
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) உறுப்பினர்களைப் பயிற்றுவிப்பதற்காக முன்னாள் ராயல் விமானப்படை விமானிகளை சீனா நியமித்துள்ளது.
பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி, சீனா 30 ஓய்வுபெற்ற பிரிட்டிஷ் இராணுவ விமானிகளை நியமித்துள்ளது, இதில் சிலர் அதிநவீன போர் விமானங்களை ஓட்டியுள்ளனர்.
இந்த நடைமுறை பிரித்தானிய தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என அமைச்சு கவலை தெரிவித்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பிரிட்டிஷ் விமானிகளில், ரோயல் விமானப்படையின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் ஆயுதப் படைகளின் பிற கிளைகளும் அடங்குவர் என்று மூத்த அதிகாரி கூறினார்.
இந்த நடைமுறையை நிறுத்த முயற்சிக்க நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படுவதாக பிரிட்டன் கூறியுள்ளது. இது கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டபோதும், சமீபத்திய மாதங்களில் வேகம் பெற்றதாக பிரிட்டன் அதிகாரி கூறினார்.
தொற்றுநோய் தொடர்பான பயணத் தடை மாதங்களில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை மந்தமான பிறகு, விமானிகளைக் கவரும் சீனாவின் முயற்சிகள் அதிகரித்துள்ளன என்று அந்த அதிகாரி கூறினார்.
ஓய்வுபெற்ற விமானிகள் யாரும் உளவு, நாசவேலை மற்றும் பிற குற்றங்களை உள்ளடக்கிய உத்தியோகபூர்வ இரகசியச் சட்டம், பிரிட்டிஷ் சட்டத்தை மீறியதாக சந்தேகிக்கப்படவில்லை. ஆனால் உளவு சட்டங்களுக்கு முரணான பயிற்சி நடவடிக்கைகளுக்கு எதிராக ஓய்வுபெற்ற சேவை உறுப்பினர்கள் மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்க பிரிட்டன் உறுதியாக இருப்பதாக அந்த அதிகாரி கூறியுள்ளதாக நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
“சீன மக்கள் குடியரசில் மக்கள் விடுதலை இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக முன்னாள் இங்கிலாந்து ஆயுதப்படை விமானிகளை நியமிக்கும் சீன திட்டங்களை நிறுத்த நாங்கள் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்,” என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
சீன ஒப்பந்தங்கள் லாபகரமானவை, பல ஆண்டுகளுக்கு முன்பு செயலில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற விமானிகளுக்கு ஆண்டுக்கு சுமார் USD 270,000 என்பது மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கும் என்று அந்த அதிகாரி கூறினார்.
எவ்வாறாயினும், ஓய்வுபெற்ற விமானிகள் சீன இராணுவத்திடம் இருந்து பயிற்சி ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்துவதற்கு பிரிட்டனிடம் தெளிவான சட்ட கருவிகள் இல்லை என்று அந்த அதிகாரி கூறினார்.