ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று சீனாவின் தியான்ஜின் நகருக்கு சென்றார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை அவர் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று முன்தினம் நடைபெற்ற 15-வது இந்திய, ஜப்பான் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
இதன் பிறகு அவர் ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவை சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் 90 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
குறிப்பாக அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடியை முதலீடு செய்ய உடன்பாடு எட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று டோக்கியோவில் 16 ஜப்பானிய ஆளுநர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் டோக்கியோவில் இருந்து செண்டாய் நகருக்கு புல்லட் ரயிலில் பயணம் செய்தார். அவரோடு ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவும் சென்றார்.
ஜப்பான் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க செண்டாய் நகரில் இருந்து சீனாவின் தியான்ஜின் நகருக்கு விமானத்தில் சென்றார். அங்குள்ள விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடந்த 2001-ம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
தற்போது எஸ்சிஓ அமைப்புக்கு சீனா தலைமையேற்று உள்ளது.
இதன்படி எஸ்சிஓ அமைப்பின் உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை, பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசுகிறார்.
மேலும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உள்ளிட்ட உலக தலைவர்களையும் அவர் தனித்தனியாக சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்புகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது.