சீனி இறக்குமதியின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் அவசியம் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுதாக்கல், வாய்மூல கிடைக்கான கேள்விச்சுற்று உட்பட பிரதான சபை நடவடிக்கைகளை முடிவடைந்த பின்னர் அமைச்சு தொடர்பான அறிவிப்பை விடுப்பதற்கு நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
சீனி இறக்குமதிக்கான வரி திட்டமிட்ட அடிப்படையில் குறைக்கப்பட்டதால், சீனி இறக்குமதியின்போது பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு இராஜாங்க அமைச்சர் விரிவான பதில்களையும், விளக்கத்தையும் முன்வைத்தார்.
எதிரணிகளால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரித்ததுடன், பொய்யுரைப்பதே எதிரணிக்கு எஞ்சியுள்ள ஆயுதம் என விமர்சித்து, வரிக் கொள்கைகள் பற்றியும் விபரித்தார்.
இராஜாங்க அமைச்சரின் உரையின் பின்னர் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,
” சீனி விவகாரம் குறித்து இராஜாங்க அமைச்சர் நீண்டதொரு உரை நிகழ்த்தினார். அது தொடர்பில் ஆழமாக கலந்துரையாடுவதற்கு இரு நாட்கள் விவாதம் அவசியம். ” – என்றார்.