” உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, உரத்தை வழங்குவதற்கு அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
” முன்னேற்பாடுகள் எதுவும் இன்றி இரசாயன உரத்துக்கு திடீர் தடை விதிக்கப்பட்டதால் விவசாயிகள் இன்று பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக சீனாவில் இருந்து சேதனப் பசளையை இறக்குமதி செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்தது. அந்த சேதனப் பசளையில் தீங்கு விளைவிக்கக்கூடிய பக்ரீரியாக்கள் இருப்பதாக எமது நாட்டு ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டினர். ஆய்வுகள்மூலம் அதனை உறுதிப்படுத்தினர்.
எனினும், இலங்கை நிறுவனத்தால் நடத்தப்பட்ட பரிசோதனையை ஏற்பதற்கு சீன நிறுவனம் மறுத்துள்ளது. இதனால் மூன்றாம் தரப்பை நாடுவதற்கு தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. இதனை அனுமதிக்க முடியாது. மூன்றாம் தரப்பை நாடுவது எமது நாட்டிலுள்ள புத்திஜீவிகளை, ஆய்வாளர்களை அவமதிக்கும் செயலாகவே அமையும்.” – என்றார்.
