அமெரிக்காவின் மூலோபாயப் பகுதிகளில் சீன முதலீடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஆவணத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு முன்னுரிமை அளித்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அதற்கு தேவையான அறிவுறுத்தல்களை அமெரிக்காவின் வெளிநாட்டு முதலீட்டு குழுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் வழங்கியுள்ளார் என்றும் வௌ்ளை மாளிகை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், எங்களது நிதியையும் அறிவியல் நுணுக்கங்களையும் பயன்படுத்தி தங்களது இராணுவ, உளவு, பாதுகாப்பு நடவடிக்கைகளை நவீனப்படுத்திக் கொள்கின்ற அதேநேரம் எமது பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலும் விடுக்கப்படுகின்றன. அதனால் எமது மூலதனம், தொழில்நுட்பம் மற்றும் அறிவு என்பன எங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கப்பட வேண்டும். அதனால் அமெரிக்க நலன்களுக்கு சேவை செய்யும் முதலீடுகளை மாத்திரம் அனுமதிக்கப்படுவதை உறுதி செய்ய புதிய விதிகள் வழிவகுக்கும்.
அதேநேரம் குறைக்கடத்தி, செயற்கை நுண்ணறிவு, குவாண்டம், உயிரி தொழில்நுட்பம், விண்வெளி உள்ளிட்ட உணர்திறன் தொழில்நுட்பங்களில் அமெரிக்கர்கள் சீனாவில் மேற்கொண்டுள்ள முதலீடுகளுக்கு புதிதாகவோ அல்லது ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளையோ விரிவுபடுத்துவது குறித்தும் ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலிக்கும் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.