சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி திட்டமிட்ட அடிப்படையில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளருக்கும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையிலான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (17) தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்றது.
இதன்போது பொதுத்தேர்தல் தொடர்பான சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல், தேர்தல் நடத்தும் விதம் உட்பட சமகால விவகாரங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
குறிப்பாக பிரச்சாரங்களை முன்னெடுப்பதற்காக தேர்தல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள வழிகாட்டல்களை அவ்வாறே வர்த்தமானியில் அறிவித்தால், பிரச்சாரத்தை முன்னெடுக்கமுடியாத நிலை ஏற்படும். எனவே, மக்கள் பிரதிநிதிகளுக்கு தமது நிலைப்பாடுகளை வாக்காளர்களுக்கு தெரிவிப்பதற்கு வாய்ப்பிருக்கவேண்டும் .”: – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், கொரோனா வைரஸ் பரவலைக்கருத்திற்கொண்டு தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆணைக்குழு முடிவொன்றை எடுக்கவேண்டும் என சில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தேர்தல் நடைபெறும் என்றும், ஏதேனும் பகுதி முடக்கப்பட்டால் அங்கு பிரிதொரு நாளில் தேர்தலை நடத்தக்கூடியதாக இருக்கும் எனவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார் என அரசியல் கட்சியின் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.
” மூன்று நாட்களுக்கு ஒரு முறை நாட்டின் நிலைமை கண்காணிக்கப்படும். அதற்கேற்ற வகையில் பாதுகாப்பான முறையில் , சில மாற்றங்களுடன் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் குறிப்பிட்டார் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
அதேவேளை, அரச ஊடகங்கள் ஆளுங்கட்சிக்கு மாத்திரமே முக்கியத்துவம் வழங்குகின்றது. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் கோரிக்கை விடுத்தார்.